வேங்கை மரங்களால் விளையும் நன்மைகள்!
வேங்கை மருத்துவ குணம் வாய்ந்த மரமும்கூட. தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் முதன்மையானது இந்த வேங்கை. கோயில்களில் தல விருட்சமாக வேங்கை மரங்களே அதிகம் இருக்கும். வேங்கை மரம் பற்றி அமையப்பெற்றுள்ள தேவாரப் பாடல் ஒன்று வேங்கை மரம் எவ்வளவு தொன்மைவாய்ந்தது என்பதை நமக்கு விளக்குகிறது. உலகில் இன்று பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள சர்க்கரை நோய்க்கு வேங்கை மரப்பட்டை நல்ல மருந்து என கண்டறியப்பட்டுள்ளது. தோல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதிலும் வேங்கை மரப்பட்டை நன்கு செயல்புரிகிறது. வேங்கை மரம் சுற்றுச்சூழலில் வெப்பத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பேருதவி புரிகிறது. கொழுத்தும் கோடையிலும் பூமியின் வெக்கையை உள்வாங்கிக்கொண்டு குளிர்ச்சியைத் தரும் விசேஷ குணத்தை இயற்கை இந்த மரத்திற்கு அளித்துள்ளது.
"பொருளாதார அடிப்படையில் குறிப்பிட்ட சில மரங்களுக்கான சந்தை மதிப்பு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் தேக்கு, செஞ்சந்தனம் ஆகியவற்றுக்கு அடுத்து மதிப்புள்ள மரமாக கருதப்படுவது வேங்கை"
இதுமட்டுமல்லாமல் வீட்டு உபயோக மரச்சாமான்களான கட்டில், நாற்காலி, மேசை போன்றவற்றை தயாரிப்பதற்கு வேங்கை மரங்கள் பயன்படுகின்றன. 10 ஆண்டுகளில் 15 அடி உயரம், 3 அடி சுற்றளவு என்று இந்த மரங்கள் வளர்கின்றன. 25 முதல் 30 ஆண்டுகளில் மரத்தில் வைரம் பாய்ந்திருக்கும். வேங்கையைப் பொறுத்தவரை 10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஏக்கர் கணக்கில் நடும்போது நன்கு வைரம்பாய்ந்த வேங்கை மரக்கட்டைகள் கன அடியைப் பொறுத்து லட்சக்கணக்கில் வருமானத்தை தரும்.
விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கனிசமான வருவாயை இம்மரங்கள் ஈட்டித்தரும். மேலும், வெக்கையை தணிக்கும் இதன் தன்மையைக் கருத்தில்கொண்டு வீட்டின் முன்பும் குடியிருப்பு பகுதிகளிலும் நாடுவதால் குளிர்ச்சியான சூழலைப் பெறமுடியும்.
கட்டுமானத்துறைக்கு மரத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் வேளாண்காடுகள் வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
பயன்பாடு
வேங்கை மரத்தின் (வைரம், இலைகள், பூக்கள் உட்படப்) பல்வேறு பகுதிகளும் நெடுங்காலமாக ஆயுர்வேத மருத்துவத்திற் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேங்கை மரவைரம் காயங்களை மூடவும், எரிவு மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.