நாவல் மரங்களால் விளையும் நன்மைகள்
நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும். நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாகப் பளபளப்புடன் இருக்கும்.
மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரைக் குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்குக் குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. இது ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரைக் கிடைக்கும்.
மருத்துவ பயன்கள்
நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதைக்கட்டுப்படுத்த நாவல்; பழத்தின்விதைகள் சிறந்தமருந்து.இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை,மாலை, வேளைகளில் சாப்பிட்டு வந்தால்போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.
ரத்தப்போக்கு:
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்துக் குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.
இதைச் சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதைக் குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். இதன் துவர்ப்பு ருசியும், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் நாவில் படிந்துவிடும் நீல நிறமும் காரணங்களாக இருக்கலாம்.
நாவல் பழத்தைக் குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும். பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவேக் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் 3 மணி நேரத்திற்குப் பால் அருந்தக் கூடாது.
வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது. அதிக மருத்துவ குணமுள்ள நாவல் மரங்களை நட்டு அனைவரும் பயன் பெறச் செய்வோம்.