அத்தி மரம்
அத்தி மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) எனப் பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி, அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம், சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாகச் சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாகப் பதப்படுத்தாமல் உண்ண முடியாது. திருவொற்றியூர், திருக்கானாட்டுமுள்ளூர் முதலிய திருக்கோயில்களில் இரண்டாவது தலைமரமாக விளங்குவது அத்திமரமாகம்.
மரத்தின் பயன்கள்
அத்திப்பழத்தில் புரதம், சர்க்கரை, கால்சியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் 4 மடங்கு அதிக சத்துக்கள் இருக்கிறது. இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. உலர வைத்து பொடியாக்கிய அத்தி மர இலைகள் பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லது.
காயங்களில் வடியும் ரத்தப்போக்கையும், இதைக்கொண்டு நிறுத்தலாம். இந்த பொடியில் தயாரித்த கலவையக் கொண்டு நாள்பட்ட மற்றும் அழுகிய புண்களைக் கழுவினால் குணமாகிவிடும். இதன் இலைகளைக் கொதிக்க வைத்த தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண்கள் ஆறும். மேலும் ஈறுகளில் சீழ் வடிவதும் குணமாகும். அத்திப்பழம் மிகச்சிறந்த ரத்த பெருக்கி ஆகும்.